Friday, September 12, 2008

உலக புகழ்பெற்ற மதுபானி ஓவியங்கள்


ஓவியக் கலைகளில் இந்தியா தலை சிறந்தது என்பதற்குச் சிறந்த உதாரணம் மதுபானி ஓவியங்கள். மதுபானி ஓவியங்கள் இந்தியா வின் பீஹார் மாநிலம் மிதிலா பகுதியில் வளர்ச்சி கண்டது. இதனால் இக்கலை மிதிலா ஓவியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கோடுகள் வரைந்து அவற்றில் வண்ணங்கள் நிரப்பி ஓவியம் வரைவது மதுபானி வகை ஓவியங்கள் ஆகும். இந்தக் கலையினைத் தொடக் கத்தில் அப்பகுதியில் இருந்த பெண்கள் மட்டுமே செய்து வந்தனர்.

தற்போது இந்தக் கலையில் ஆண்களும் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலையில் பழங்குடியினர் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாக இருப்பதால் இந்தக் கலை மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த ஓவியங்களை வரையும் கலைஞர்கள் மினரல்கள் கொண்டு தாங்களாகவே வண்ணங்களைத் தயாரிக் கின்றனர். இந்த ஓவியங்கள் மண் சுவர் அல்லது புதிதாக வண்ணம் தீட்டப்பட்ட சுவர்களில் வரையப்படுகின்றன. இந்தக் கலை இப்பொழுது பிரபலமாக இருப்பதால், விற்பனைக்காக இவ்வகை ஓவியங்கள் காகிதம் மற்றும் கேன்வாஸ்களில் வரையப்படுகின்றன. இந்த ஓவியம் வரையத் தேவைப்படும் பிரஷ்ஷினை மூங்கில் குச்சியில் பஞ்சு சுற்றித் தயாரிக்கின்றனர். பல இயற்கைப் பொருட்கள் கொண்டு வண்ணங்கள் தயாரிக்கின்றனர்.

இயற்கை மற்றும் புராணக் கதைகளைச் சார்ந்து படங்கள் வரைகின்றனர். கிருஷ்ணர், ராமர், சிவபெருமான், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி, நிலவு, துளசிச் செடி, திருமண வைபவம், சமூக நிகழ்வுகள் போன்ற படங்கள் சித்திரங்களாக்கப்படுகின்றன. மீத முள்ள இடங்களை நிரப்ப மலர்கள், விலங்குகள், பறவைகள், வடிவங்கள் போன்றவை வரையப் படுகின்றன.

தலைமுறை தலைமுறையாக இந்தக் கலை வளர்ந்து வருவதால் அதன் பாரம்பரியம் கெட்டுப் போகாமல் இன்றளவும் பாதுகாக்கப் படுகிறது. அகில இந்திய கைவினைப் பொருட்கள் ஆணையமும், இந்திய அரசும் பெண்களை இந்த ஓவியங்களை காகிதங்களில் வரைந்து, விற்க ஊக்கப்படுத்தி வருகிறது. மிதிலா பகுதியில் பல குடும்பங்களுக்கு இந்தக் கலை வாழ்வாதாரமாக விளங்குகிறது. வெறும் சுவர் சித்திரமாக இருந்து வந்த இந்தக் கலை, இன்று காகிதத்தில் வரையத்தொடங்கியதும் உலகப் பிரசித்தி பெற்ற கலையாகிவிட்டது.

No comments: