Thursday, September 25, 2008

அறியா பிள்ளையாய் ஆக்கிவிட்டாய்


மும்மூர்த்திகளும் மூலவர்களாய் வீற் றிருக்கக்கூடிய, உலகச்சிறப்பு வாய்ந்த ஒரே யொரு ஆலயம் தாணுமாலயன் ஆலயம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆலயம் அமைந்திருப்பது, தமிழகத்தின் தென் திசையில் இருக்கும் நகரான சுசீந்திரத்தில்தான். சுசீந்திரம் கோவிலின் சிறப்புகளைப் பற்றி இனிக் காண்போம். முன்னொரு காலத்தில் அந்த இடத்தின் பெயர் "ஞான அரணியம்'. அத்திரி முனி வனும் கூடவே அனுசூயா தேவி என்னும் கற்புக்கரசியும் வாழ்ந்த சிறப்புக்குரிய இடம். அத்திரி முனிவன் ஒருமுறை இமயமலைக்கு சென்ற பொழுது அவன் அன்பு மனையாள் அனுசூயா தேவி தனியாக வீற்றிருந்தாள். இந்த சமயத்திலே அவளது கற்பினைச் சோதித்தறியும் விநோத எண்ணம் மும் மூர்த்திகளுக்கும் தோன்றியது. அதன் பொருட்டு மூர்த்திகள் மூவரும் அந்தணர் உருவம் தாங்கி அவள் வசிக்கும் இல்லத் திற்குச் சென்றனர். அவள் வீட்டு வாயிலில் நின்று கொண்டு எங்களுக்குப் பசிக்கிறது, நீ உணவு படைக்க வேண்டும் என்று வேண்டினர். அவர்களது விருப்பத்தினை ஏற்று<, உணவு சமைத்து பரிமாறத் தயாரானாள் அனுசூயா. அதுவரை அந்த அதிர்ச்சி அவளுக்கு ஏற் படவில்லை. ஆம் ! ஆடையணிந்த ஒருவ ரால் உணவு பரிமாறப் படுமாயின் அதை தாங்கள் உண்ணலாகாது என்று அந்தணர் வடிவில் வந்த மும்மூர்த்திகளும் தங்கள் விரதத்தைக் கூறினர். இதைக் கேட்ட அனு சூயாதேவி ஒரு கணம் திடுக்கிட்டாள். மறு கணம் அவள்தன் சிந்தையில் உதித்தது ஓர் எண்ணம். அதன்படியே தன் கணவன் திருவடியைக் கழுவிய நீரை உருமாறி வந்திருந்த மும்மூர்த்திகள் மூன்று பேரின் மீதும் தெளித்தாள். மூன்று பேரும் ஒன்றும் அறியாத சின்னஞ்சிறு பிள்ளைகளாய் மாறி விட்டனர். பின்னர் அவர்களது விரதத்தின் படியே விருந்து படைத்தாள். பின்னர் அவர் களைத் தாலாட்டி உறங்க வைத்தாள். அவளது தாலாட்டில் தன்னிலை மறந்து மும்மூர்த்திகளும் உறங்கினர். இதையறிந்து பதறியபடி ஓடிவந்த முப் பெருந்தேவியருக்காக, மும்மூர்த்திகளின் பழைய உருவத்தை திரும்ப அளித்தாள் அனுசூயாதேவி. அனுசூயைக்கு அருள்தர வந்த மும்மூர்த்திகளும் அவளுக்காக இன் னும் அங்கே அருள்புரிந்து கொண்டிருக் கிறார்கள். மும்மூர்த்திகளையும் நிலைமாற்றிய இடம் என்பதால் அவ்விடம் முப்பத்து முக் கோடி தேவர்களும் வணங்கும் பெருமை யுடையது. நாம் வணங்கவேண்டும் என்றால் அவனருள் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். திருமணத் தடைகள் நீங்கு வதையும், குழந்தையின்மை நீங்குவதையும் இக்கோவில் இறைவனைத் தரிசித்தவர்கள் கண்கூடாகக் உணர்ந்திருக்கின்றர். மனக் குறை நீங்கி வளம் வரவும், உடல்பிணி நீங்கி நலம் பெறவும், விழாக் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலில் திரளுவார்கள். தென்னாட்டு ஆலயங்களில் இராமேஸ் வரம் இராமநாத சுவாமி திருத்தலத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்பட்டு வரும் திருத் தலம் இந்தத் தாணுமாலயன் ஆலயம் தான். “உனக்கு கோவிலே இல்லை’’ என்று சிவனால் சபிக்கப்பட்ட பிரம்மாவிற்கும் கோவில் இருப்பது இங்கு மட்டும் தான். தலத்தின் மூலவர் பெயர் தாணு மாலயன் என்பது. தாணு (சிவன்) + மால்(விஷ்ணு) + அயன்(பிரம்மா) என்று அந்தப் பெயருக் கான காரணம் பகரப்படுகிறது. மேல்பாகம் சிவனையும், நடுப்பகுதி விஷ்ணுவையும், அடிப்பகுதி பிரம்மாவையும் குறிக்கிறது. இந்து மதத்தின் அனைத்து தெய்வங்களுக் கும் தனித்தனியாய் கோவில் அமைந்திருப் பது இந்த தாணுமாலயன் ஆலயத்தில் மட்டும்தான் என்பது நினைவில் பதிய வேண்டிய செய்தி. இத்திருக்கோவிலின் மிகச் சிறப்பான மற்றொரு அம்சம் என்ன வென்றால் இங்கு அமைந்திருக்கக் கூடிய பதினெட்டு அடி உயரமுடைய ஆஞ்சநேயர் சிலை. மிகுந்த கலை நயத்துடன் இந்த அனுமனின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆஞ்சநேயர் சிலை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யாத காரணத் தினால் அனைவரும் தொட்டு வணங்கும் படியாக உள்ளது. அனுமாருக்கு வெண் ணெய் சாத்தி வழிபடுவது இங்கு முக்கிய மான வழிபாடாக கருதப்படுகிறது. அபூர்வ மாக காணப்படக்கூடிய கணேசினி என்னும் பெண் உருவம் கொண்ட விநாயகர் சிலை இங்கு அமைந்திருப்பது சிறப்பம்ச மாகும். மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட நந்தி சிலையும், நான்கு பெரிய இசைத் தூண் களும் கண்களுக்கு கலை விருந்துகளாகும். இங்கு அமைந்திருக்கும் மிகப்பெரிய குளத் தில் நீராடுவது கங்கையில் நீராடியதற்குச் சமமாகும். சுசீந்திரம் திருக்கோவில் உயர்ந்த ஏழு நிலைக் கோபுரத்தை முகப்பின் ராஜகோபுர மாகக் கொண்டு விளங்குகிறது. இந்த கோபு ரத்தின் உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதியைப் பார்க்கலாம். கன்னியா குமரி கடற்கரையினையும் கண்டு களிக்க லாம். கன்னியாகுமரிக்கு மிக அருகில் 13 கி.மீ தொலைவில் அமைந்திருப்பதாலும் போக்குவரத்து வசதிகளுக்கும் யாதொரு குறையுமின்றி காட்சி தருகிறது அன்றைய ஞான அரணியமான இன்றைய சுசீந்திரம். “ அவனருளாலே அவன் தாள் வணங்கப் புறப்படுவோம், புண்ணிய பல பெறுவோம். ”

No comments: