
அல்லாஹ் தஆலாவின் அருளினால் இன்று எங்களுக்கு நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஒரு மாதம் முழுவதும் நோன்பிலிருந்து ஷவ்வால் மதியின் தலைப் பிறையை வான வீதியில் கண்டு இன்று நாங்கள் ஈதுல் "பித்ர்' நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.முஸ்லிம்கள் கொண்டாடும் இரு பிரதான பெருநாட்களில் முதல் பெருநாள் நோன்புப் பெருநாளாகும். "ஈதுல் பித்ர்' எனும் இந்த புனித பெருநாள் சமத்துவத்தை, ச÷காதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் ஒரு உன்னத பெருநாளாக இருக்கிறது.இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும், தவிர்த்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் தம்மையே புடம் போட்டுக் கொண்டு, இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இறை மறை கூறியபடியும், வள்ளல் நபியவர்கள் காட்டியபடியும் நோன்பு நோற்றவர்களுக்கும் அதன்படி ஒழுகியவர்களுக்கும் இது இனிய பெருநாள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.இன்றைய பெருநாள் தினத்திலே முஸ்லிம் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, ஏகனை தொழுது, குளித்து, புத்தாடையணிந்து, நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு, பின்னர் பள்ளிவாசலிலே ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்ச்சியடைவர். பள்ளிவாசலிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று பெருநாள் தொழுகை தொழுது பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வர்.அதேபோல் தமது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் இல்லம் சென்று இவ்வாறே பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து நல்லமல்கள் பல புரிந்து இன்று பெருநாளை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நாளில், புனித ரமழான் கற்றுத் தந்த பாடத்தை, போதனையை பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வாழ்க்கை முறைக்கான பயிற்சியை வழங்குவதில் ரமழானின் பங்களிப்பு அளப்பரியதாகும்.சரியான முறையில் நோன்பு நோற்றதன் மூலமாக இனிய குணம், கற்புடைமை, பொறுமை, நேர்மை, நன்நடத்தை, சகிப்புத்தன்மை, உளத்தூய்மை, வீரம், ஏழைகளின் துயரை உணரும் தன்மை, அவர்களுக்கு உதவும் மனப்பான்மை, மனித நேயம் என்பன போன்ற பல்வேறு நற்பண்புகளை ஒருவருக்கு அடைவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நற்பண்புகளை ஒரு முஸ்லிம் ஏனைய மாதங்களிலும் கடைப்பிடிக்கவேண்டும். அதற்கான பயிற்சியே ரமழான் மாதமாகும். ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாதத்தில் இந்தப் பயிற்சி மனிதனுக்கு வழங்கப்படுகிறது. ரமழான் முடிவடைந்த பிறகு இந்த நற்பண்புகளை மனிதன் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதன் பிரதிபலனை அவனே அனுபவிக்க வேண்டி ஏற்படும். இஸ்லாமிய பெருநாட்கள் இரண்டு (நோன்பு, ஹஜ் பெருநாட்கள்) அல்லாஹ் தஆலாவுக்காக மனிதனால் செய்யப்பட்ட தியாகங்களுக்கு அன்பளிப்பாக, மகிழ்ச்சிக்காக வல்ல நாயகன் செய்த ஏற்பாடாகும். இப் பெருநாட்களில் உளவியல் ரீதியான கூச்சல் கும்மாளங்களில் ஈடுபடாமல் இந்த மகிழ்ச்சியான நாட்களை கொண்டாட வேண்டும். ரமழானில் வணக்கங்கள் புரிவதை பற்றி வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதுடன், தேவை உடையவர்களையும் ஏழைகளையும் விதவைகளையும் மற்றும் அநாதைகளையும் கவனித்துக் கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.ஆகவே, வசதி படைத்தவர்கள் எல்லோரும் ஏழைகளுக்கு உதவி புரிந்து அவர்களையும் பெருநாள் கொண்டாடச் செய்ய வேண்டும். ரமழான் மாதத்தில் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதது போல், இனிவரும் காலங்களிலும் பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுது வரவேண்டும். ரமழான் முடிந்து விட்டது. இப்பெõழுது எல்லாவற்றுக்கும் விடுமுறை கிடைத்துவிட்டது என்று நினைக்கக்கூடாது. மாறாக எந்த நிலையிலும் வணக்கங்களை நிறைவேற்றி வரவேண்டும். அதேபோன்று படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் எந்த நிலையிலும் செய்துவர வேண்டும். எவரேனும் ஒருவருடைய உள்ளத்தை படைப்பினங்களுக்கு நன்மையளிப்பதற்கு நாட்டங் கொண்டுள்ளதாக இறைவன் கண்டால், அவருக்கு அதற்கான பாக்கியத்தை வழங்குகிறான். அத்துடன் அவனுடைய படைப்பினங்களுடன் இரக்கத்துடன் நடந்து கொள்கின்றானோ, அந்தளவு அவனுடைய ஆயுள் நீண்டு விடுகிறது. மேலும், அல்லாஹ் த ஆலா அவனுடன் இருக்கின்றான். அத்துடன் அவனுடைய வாழ்க்கைக்கு மதிப்பளிக்கின்றான். ஆனால், அவன் எந்தளவு இறைவனை விட்டும் பொடுபோக்கானவனாகவும் கவனமற்றவனாகவும் இருக்கின்றானோ அல்லாஹ் த ஆலாவும் அந்த மனிதனை பொருட்படுத்துவதில்லை. அல்லாஹ் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனுக்கு முற்றாக கீழ்ப்படிவதுதான். அதற்காக வேண்டி அவன் தனது பணம், பொருள், குடும்பம் மற்றும் உலக விஷயங்களை தியாகம் செய்வதன் மூலம்தான் அவனால் உண்மையான பெருநாளைக் கண்டுகொள்ள முடியும்.இறை விருப்பத்தையும் அவனது நெருக்கத்தையும் அடைவதில் ஒருவன் வெற்றி பெற்றால் அதுதான் பெரிய வெற்றியாகும். அதுதான் பெரிய பெருநாள் ஆகும். அதேபோல் மனித குலத்திற்கு சேவை செய்வதன் மூலமாகவும் குறிப்பாக மனித இனத்தை இறைவனின் பக்கம் கொண்டு போய் சேர்த்து விடுவதன் மூலமாகவும் அவர்களுக்கு தக்வா என்னும் இறையச்ச ஆடையை அணியச் செய்வதன் மூலமாகவும் உண்மையான பெருநாளை கொண்டாட முடியும்.இன்றைய பெருநாளுக்காக நாம் அணிந்துள்ள புத்தாடைகள் அது பழையதாகி விடும். ஆனால், அந்த நிரந்தரமான பெருநாளுக்கான ஆடைகள் பழையதாகிப் போய் விடுவதில்லை.மற்றபடி இன்று வந்திருக்கும் பெருநாள், அது இன்றுடன் முடிந்து விடும். ஆனால், அந்தப் பெருநாள் அது நிரந்தரமான ஒன்றாகும். இன்றைய பெருநாள் அந்த நிரந்தரமான பெருநாளுக்கான ஒரு மாதிரியாக அமைந்திருக்கிறது. எவரெவர்க்கு அந்த நிரந்தரமான பெருநாள் கிடைத்து விடுமோ அதுதான் உண்மையான பெருநாளாகும். எனவே நாம் அனைவரும் இன்றைய பெருநாளிலிருந்து அந்த நிரந்தரமான பெருநாளுக்காக வேண்டி எம்மை தயார்ப்படுத்திக் கொள்வோமாக. உவகையுடன் பெருநாளைக் கொண்டாடும் இந்நாளில் ரமழõன் கற்றுத்தந்த பாடத்தை எமது வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிப்போமாக! ஆமீன்.
No comments:
Post a Comment